திண்டுக்கல் மாவட்டம் பழனியில், கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் ஏறி, திமுக பிரமுகர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், 2015 ம் ஆண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அப்போது, திமுக நகர துணைச் செயலாளர் சக்திவேல், திடிரென விழா மேடையில் ஏறி, பட்டமளிப்பு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தச்சொல்லி தகராறில் ஈடுபட்டார். திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரை விழாவிற்கு ஏன் அழைக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ வாராமல் பட்டம் அளிக்கக்கூடாது என்றும் கூறி ரகளையில் ஈடுபட்டதுடன், விழாவை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பட்டமளிப்பு விழாவிற்கு அமைச்சர் உட்பட யாரையும் அழைக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மாணவிகள் முன்னிலையில் நாகரீகமின்றி தகராறு செய்த திமுக நகர துணை செயலாளர் சக்திவேலின் செயலால், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
Discussion about this post