கோயம்பேடு காய்கறி அங்காடிகள் காலை 9 மணி வரை மட்டுமே இயங்கும், வெள்ளிக்கிழமை தோறும் அங்காடிகளுக்கு விடுமுறை விட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 நிபந்தனைகளோடு கோயம்பேடு மொத்த காய்கறிகள் சந்தை திறக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல சென்னையில் பரவத் தொடங்கியது முதலே மக்கள் கூடும் இடங்களை தடை செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பணிகளை துரிதப்படுத்தியது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடமான கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த மே மாதம் முதல் மூடப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு வணிகர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வருகிற 28 ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, காய்கறி சந்தை இயங்குவது தொடர்பாக, 16 நிபந்தனைகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டு உள்ளது.
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1.சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உரிய பரிசோதனைகள் செய்யப்படும்.
2.அங்காடிகளுக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்குத் தடை.
3.தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலுமாக தடை.
4.அனைத்து கடைகளிலும் முகக்கவசம், தெர்மோ மீட்டர், ஆக்சி மீட்டர் மற்றும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயம்.
5.கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஆடைகள் வழங்கப்படும். அதனை உடுத்திய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
6.அனைத்து நபர்களும் முககவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைப்பிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7.கடையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்.
8.கடையின் நுழைவாயில் முன்பு பெடல் சனிடைசர் வைக்க வேண்டும்; அனைவரும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்ட பிறகே பொருட்களைத் தர வேண்டும்.
9.வியாபாரிகள் தத்தமது கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்; பொது இடங்களில் ஆக்கிரமிப்புக்கு அனுமதி இல்லை.
10.சாலையோர விற்பனை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்வதற்கு முற்றிலும் தடை.
11.மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளுக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.
12.வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு அதிகாலை முதல், காலை 9 மணி வரை அனுமதி. காய்கறி அங்காடியில் உள்ள நுழைவாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.
13. அங்காடி உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். காவல்துறையினருக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
14.வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அங்காடிப் பகுதியில் ஒரு வழிப்பாதையாக அறிமுகப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீர் செய்யப்படும்.
15.கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கள் அனைத்தும் கேமராக்கள் மூலம் அங்காடி நிர்வாகக் குழுவால் கண்காணிக்கப்படும்.
16.பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.