இ-பாஸ் இல்லாமலேயே கோயம்பேடு வரும் வெளி மாநில காய்கறி லாரிகள் :

“கோயம்பேடு சந்தைக்கு தடையின்றி இரவில் காய்கறி வாகனங்கள் வருகின்றன. இ-பாஸ் இல்லாமலேயே வெளி மாநில காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வியாபாரிகளுக்கு தமிழக அரசு , காவல்துறை முழு ஒத்துழைப்பு தருவதாக தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர். 

இது தொடர்பாக, சென்னை கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்ததாவது: 

” கோயம்பேடு சந்தைக்கு வருகை தரும் அனைத்து வியாபாரிகள் , தொழிலாளர்கள் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு அம்மா மினி கிளினிக் மூலம் அனைத்து வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் சந்தையில் ஓரிருவரை தவிர யாருக்கும் கொரோனா இல்லை. இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பால் , காய்கறிகள் தங்கு தடையின்றி சென்னை வருகிறது. ககன்தீப் சிங் பேடி , மாகராட்சி ஆணையர் பிரகாஷ் , மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோரிடம் எங்களது தேவைகள் குறித்து 2 நாளுக்கு முன்னர் மனு அளித்திருந்தோம். அவர்களது அறிவுரைப்படியே செயல்படுகிறோம்.

கொரோனா தீரும் வரை அரசு விதிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற தயாராக இருக்கிறோம். நேற்றிரவு சந்தைக்கு வந்த வாகனங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த சரக்கு வாகனங்களுக்கு ஈ -பாஸ் கேட்கப்படவில்லை.

எதிர்பார்த்ததை காட்டிலும் காய்கறி வரத்து அதிகம் இருப்பதால் விலை குறைந்தே காணப்படுகிறது. தக்காளி கிலோ 10 , வெங்காயம் கிலோ 15 என்று 20 ரூபாய்க்கு குறைவாகவே அனைத்து காய்கறிகளும் விற்பனையாகிறது.

சிறு வியாபாரிகளும் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். என்றாலும் பொதுமக்கள் சில்லரையாக காய்கறி வாங்க கோயம்பேடு வருவதை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version