நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மஞ்சளுக்கான விலை நிர்ணயம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மஞ்சளுக்கு போதிய விலை இல்லாததால், உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் ஆய்வு செய்து மஞ்சளுக்கான விலையை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.