ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 4-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அரசு ஊழியர்களுடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதித் தேவைகளை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியுள்ளது என கூறியுள்ள முதலமைச்சர், நிதிச்சுமை இருந்த போதிலும், அகவிலைப்படியை அவ்வப்போது வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேலை நிறுத்தத்தால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை அரசு முறையாக பரிசீலிக்கும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.