பிரதமருக்கும், சீன அதிபருக்கும் தமிழக மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: முதல்வர்

பிரதமர் மோடியும் சீன அதிபரும் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், பிரதமருக்கும், சீன அதிபருக்கும் பொது மக்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா- சீன நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டிற்கே பெறுமை சேர்க்கும் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத்தலைவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதே போன்று, 1956 ஆம் ஆண்டில் சீன அதிபர் சூ என்லாய் மகாபலிபுரத்தை அடுத்த குழிப்பான் தண்டலம் வருகை தந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கும் சீன அதிபருக்கும் தமிழக மக்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version