உடல் நலக்குறைவால் காலமான தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி, சென்னையில் இருந்து, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையம் சென்றார். பின்னர், தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாளின் உடலுக்கு, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, ராஜேந்திர பாலாஜி மற்றும் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில், முதலமைச்சரின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.