அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிக் கூடத்தை மீண்டும் திறக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அகமதாபாத்தில் நடத்தப்பட்டு வந்த தமிழ் பள்ளிக் கூடம் மூடப்பட்டதாக வந்த செய்தியைக் கேட்டு வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால், தமிழ் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநில வளர்ச்சிக்கு தமிழர்கள் அதிக பங்களிப்பை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், குஜராத் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, மூடப்பட்ட தமிழ் பள்ளிக் கூடத்தை மீண்டும் திறக்க வேண்டுமென கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ் பள்ளிக் கூடத்தை நடத்த தேவையான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்க தயாராக உள்ளதாகவும், தமிழர்களின் உரிமையை குஜராத் நிலை நாட்டும் என்று தான் நம்புவதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.