லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற கிவ் தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக சுகாதாரத் துறையை மேம்படுத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற முதலமைச்சர், அங்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இங்கிலாந்து எம்.பி.க்களை சந்தித்து முதலமைச்சர் பேசினார்.
பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் பொட்டானிக் கார்டன் என்று அழைக்கப்படும் கிவ் தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றிப் பார்த்தார். பல்வேறு நாடுகளின் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வளரும் பூக்கள், காய்கறிகள், பழங்கள் கிவ் பூங்காவில் உலகமே வியக்கும் வண்ணம் பயிரிடப்பட்டுள்ளன.
அமேசான் டிராபிகல் கிளைமேட்டில் வளரும் தாவரங்கள், பாலை வனத்தில் வளரும் பயிர் இனங்கள், குளிர் பிரதேசங்களில் வளரும் பயிர்கள் போன்றவை கிவ் பூங்காவில் வளர்க்கப்படும் முறை குறித்தும், காளான் தோட்டம் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கிவ் பூங்காவை போன்று தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது கட்டமாக முதலமைச்சர் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நியூயார்க் செல்கிறார்.