ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அது நிறைவேறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டத்தை தடுக்கும் வகையில், திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவது போல் திமுக செயல்படுகிறது என்று விமர்சித்த முதல்வர், இது மாநில அரசுக்கு உட்பட்ட சட்டம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்து விட்டார் எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
மேலும், சட்டத்தில் எந்த குறையும் இல்லை என்றும், குறையிருந்தால்தானே தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்னையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால், ஒருபோதும் நிறைவேறாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.