நாட்டிலேயே தொழில் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். தொழில் தொடங்க தமிழகத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தொழில் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலம் என்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி அடைந்ததன் மூலம், 43 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினார். இதையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.
முதலமைச்சரின் துபாய் சுற்றுப் பயணத்தின் போது, 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொழில் முனைவோர்கள் உடனான கூட்டத்தில், 3 ஆயிரத்து 750 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இதன் மூலம், தமிழகத்தில் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, அமெரிக்காவில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் 5 ஆயிரத்து 80 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.