முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரவாக அலங்காநல்லூர் கேட் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பதே அதிமுக அரசின் லட்சியம் என்றார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.
செக்கானூரணியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பேசிய முதலமைச்சர், குடிசைகள் இல்லாத நகராக தமிழகம் மாற்றப்படும் என்று உறுதியளித்தார். ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
உசிலம்பட்டியில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உசிலம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 58ம் கால்வாய் திட்டத்தை அதிமுக அரசுதான் நிறைவேற்றியது, அதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறினார். காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காணப்பட்டதை போல, முல்லை பெரியார் அணை பிரச்சனையிலும் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறினார்.
ஆண்டிப்பட்டியில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காற்றிலேயே ஊழல் செய்த கட்சி என்றால், அது திமுகவையே சேரும் என்று விமர்சித்தார்.
கானாவிளக்கு பகுதியில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 152 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்
கண்டமனூர் பகுதியில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கண்டமனூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 6 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். மேலும் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 30 ஊராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் பெற்று தரப்படும் என்று கூறினார்.