தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 2 ஆம் கட்ட பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கடலூர் மாவட்டம் வல்லம்படுகை, நாகை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி, நன்னிலம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து திருவாரூர் மாவட்டம், கொராடச்சேரியில் வேனில் நின்றபடி திருவாரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவாகவும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தாழை சரவணனுக்கு ஆதரவாகவும் முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் அனைவருக்கும் பிரதமர் கனவு இருப்பதாக விமர்சித்தார். எனவே, அந்தக் கட்சிகளால் மத்தியில் நிலையான ஆட்சியை அமைக்க முடியாது என்றும், பிரதமர் மோடியால் மட்டுமே, சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் எனவும் கூறினார்.