பருவமழை பொய்த்திருக்கும் நிலையில் நீரை யாரும் அரசியலாக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பட்டியலிட்டார். பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு நீர் ஆதரமாக விளங்கும் ஏரிகள் வறண்டிருப்பதாக கூறிய முதலமைச்சர், 65 கோடி ரூபாய் செலவில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் 10 எம்.எல்.டி நீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்றார்.
இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கத்தை உயர்த்தும் பணிக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல், மக்களவை தேர்தல் சமயத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரி மூலம் அதிகளவில் நீர் கொண்டு செல்லப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பார்க்க வரும் பொதுமக்களின் தேவைக்காக லாரிகளில் அமைச்சர்களின் வீடுகளுக்கு நீர் கொண்டு செல்வது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக கூறினார்.