நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்க உள்ளார்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். விழாவில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். பின்னர் சென்னை காவல்துறையினர் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதலமைச்சரை அழைத்து செல்வார்கள். கோட்டைக்கு முதலமைச்சர் வந்ததும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமை செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைப்பார்.
தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதலமைச்சர் பின்னர் சுதந்திர தின உரையாற்றுவார். அதன் பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை, தமிழகத்தில் கடந்தாண்டு சாதனை புரிந்த ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார். தொடர்ந்து அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் சாதனை படைத்த ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது வழங்க உள்ளார்.