பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின. புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமிட்டனர். இதேபோல் 3 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 5 நிறுவனங்களின் தொழில்களையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 23 நிறுவனங்கள் தமிழகத்தில் ஏழாயிரத்து 175 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்கும். இந்தப் புதிய தொழில் நிறுவனங்களில் 45 ஆயிரத்து 846 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.