சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய சூல் என்ற நாவலுக்கு, மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான சோ. தர்மன் எழுதிய தூர்வை என்ற நாவலும், சோகவனம், வனக்குமாரன் போன்ற சிறுகதைகளும், அவரின் சிறந்த எழுத்து நடைக்கு சான்றுகளாக விளங்குவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய நடையில் தனது படைப்புக்களை உருவாக்கி, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் சோ. தர்மன் என்றும், மத்திய அரசு அவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்திருப்பது, அவரது புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருது பெற்ற சோ. தர்மனுக்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உருளைகுடி கிராம மக்களுக்கு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை சமர்பிப்பதாக, சோ.தர்மன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் எழுதிய சூல் நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த விருது மத்திய அரசு தனக்கு கொடுத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்தார்.