கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தாரமங்கலத்தில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாடு பாதுகாப்பாக இருக்க நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தான் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ஏற்காததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மேகதாது அணை உறுதியாக கட்டப்படும் என வாக்குறுதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும் என்று குறிப்பிட்டார்.