அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் மீட்பு பணியை விமர்சிக்கிறார்: முதல்வர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், குழந்தை சுஜித்தின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலன் அளிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். இந்த சமயத்தில், சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்றதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே குற்றம்சாட்டுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார் எனக் குற்றம்சாட்டினார்.

Exit mobile version