பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவை, பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.