மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு இணங்க, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வைகை பூர்வீக பாசனப்பகுதி மூன்றுக்கு, 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, ஆயிரத்து 441 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி இரண்டுக்கு, 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலும், 386 மில்லியன் கன அடியும், 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலும், பகுதி 1ஐ சேர்ந்த நான்கு கண்மாய்களுக்கும், விரகனூர் மதகணைக்கும், 48 மில்லியன் கன அடி நீரும், வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 240 மில்லியன் கன அடி தண்ணீரையும், வைகை அணையிலிருந்து திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 3 மாவட்டங்களிலுள்ள 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.