பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது, ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தாண்டு, பொங்கலை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில், சிறப்பு பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 2 கோடியே ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றனர். வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் இதுபோன்ற அறிவிப்பு, ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை இது வெளிப்படுத்தியது.
கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தது ஒரு மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறும். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதியம் கிடையாது. 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி, அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க உதவும். அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.