2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து தமிழக மருத்துவர்கள் சாதனை படைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையில், தமிழக சுகாதார துறை சீரமைப்புத் திட்டத்துக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் சுகாதார வசதியின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றாத நோய்களின் சுமையைக் குறைத்தல், குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சுகாதார சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு, சுகாதாரத்துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு, நாட்டிலேயே முதன்மை வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து தமிழக மருத்துவர்கள் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது கேட்டுக்கொண்டார்.
விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசு, சுகாதாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து, சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அதற்காக அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக, உலக வங்கியின் திட்ட செயல்பாட்டு ஆவணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கான உலக வங்கியின் காசோலையை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், இந்தியாவுக்கான உலக வங்கியின் இயக்குநர் ஜுனைது கமால் அகமது வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.