தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணிமண்டபத்தை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மணிமண்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜு, க.பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பயனாளிகளுக்கு, வேளாண் உபகரணங்கள், கறவைப் பசுக்கள், பசுமை வீடு, இருசக்கரவாகனம், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.