முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் கூட்டத்தில், 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தொழில் முதலீட்டு வழிகாட்டுதலுக்கான உயர்மட்டக் குழு கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில், 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் முதலீடுகளில், 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், 21 தொழில் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று இரண்டாவது கூட்டம் நடந்தது. அதில், 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் முதலீடுகளில், 6 ஆயிரத்து 673 பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி, திருவள்ளூர், திருச்சி, கோவை, பெரம்பலூர், வேலூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.
கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.