கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பலர் அனுப்பி வருகின்றனர். லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயலால் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு அளிக்கப்பட்டதை போன்று, ரயில்கள் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்க சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.