செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் கணினிகள் அடித்து நொறுக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் சுங்கசாவடியை கடந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில், திருச்சி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரிடம், சுங்கச்சாவடி ஊழியர் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து ஓட்டுனர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து சுங்கச்சாவடியில் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய மக்கள் பலர், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் என 5 பேரை கைது செய்தனர். இதனிடையே, சுங்கச்சாவடியில் இருந்த கணினிகள் உடைக்கப்பட்டதால், வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.