தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த மே 4 ஆம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் நாளுக்குநாள் கோடை வெயிலின் தாக்கத்தை அதிகரிக்க செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 9 நகரங்களில் வெயில் சதத்தை கடந்து மக்களை வாட்டி வைத்து வருகிறது.
அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீடும், வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீடும் வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல் மதுரையில் 106 டிகிரி பாரன்ஹீடும், பாளையங்கோட்டையில் 104 டிகிரி பாரன்ஹீடும், கரூர் பரமத்தியில் 105.4 டிகிரி பாரன்ஹீடும் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
இதேபோல் சென்னையிலும் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனிடையே கத்திரி வெயில் வரும் 29 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.