மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் -சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்சக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
அதன்படி சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி -சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் எழுந்தருளிய நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் மீனாட்சியம்மன் -சுந்ரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 16ம் தேதி திக்விஜயம், 17ம் தேதி திருக்கல்யாணம், 18ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டம் நடைபெறவுள்ள நாளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிவரை மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 19ம் தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழா துவங்கியுள்ளதையடுத்து மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Discussion about this post