தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. பரதநாட்டியம், திருமுறை இன்னிசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர், நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.