இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திக்கு ஹாங்கி என்ற அதிநவீன காரில் பயணம் செய்யவுள்ளார்.
நாளை மதியம் 1 மணியளவில் சென்னை விமான நிலையம் வரவுள்ள ஜீ ஜின்பிங்கின் பயணம் செய்ய சீனாவிலிருந்து 4 நவீன கார்கள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி ஐ.டி.சி, சோழா ஹோட்டல், மாமல்லபுரத்துக்கு இடையே இயக்கி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. செங்கொடி பொருத்தப்பட்ட இந்த வாகனத்தில் சீன அதிபர் பயணிக்க உள்ளார். செங்கொடி என்னும் பொருள் கொண்ட இந்த கார் சீன மொழியில் ஹாங்கி என அழைக்கப்படுகிறது.
அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடனும், குண்டு துளைக்காத உலோகங்கள், கண்ணாடிகளாலும் வடிவமைக்கப்பட்ட இந்த காரில் அதிபர் ஜி ஜின்பிங் பயணிக்கவுள்ளார். இந்த கார், 18 அடி நீளம், 6 புள்ளி 5 அடி அகலம், 5 அடி உயரம் மற்றும் 3 ஆயிரத்து 152 கிலோ எடையும் உடையது. இந்த காரில், சீனாவின் கம்யூனிச ஆட்சியை பறைசாற்றும் செங்கொடியும் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது