நவீன யுகத்திற்குள் நாம் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறோம். கையில் காசு இல்லாதவர்களைக் கூட பார்த்துவிடலாம் போல, செல்போன் இல்லாதவர்களை பார்க்க முடிவதில்லை. நாம் அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களின் அடிமைகளாக மாறிக் கொண்டு இருக்கிறோம். அத்தியாவசிய அடிப்படைத் தேவையாக இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் நமக்கு தேவையாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அது நம்மை செரித்து விழுங்காமல் பார்த்துக் கொள்வதே சாலச் சிறப்பு. அதிலும் முக்கியமாக குழந்தைகளிடம் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை பெற்றோர்கள் விளையாட கொடுத்து பழக்குகிறார்கள். இதன் பின்விளைவுகள் அதி பயங்கரமாக இருக்கும் என்பதை அறியாமல் இச்செயலை அவர்கள் செய்கிறார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்காமல் செல்போன்களில் கார்டூன்கள் காண வைப்பது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் ஸ்மார் ஃபோனிற்கு அடிமையாகிறார்கள். இதன் காரணமாக சீனா ஒரு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. இனிமேல் சீனாவில் குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போன்கள் உபயோக்கிக்கக் கூடாதாம்.
சீனா அறிமுகப்படுத்தும் “மைனர் மோட்”
சீனாவின் சைபர் பேஸானது ‘மைனர் மோட்’ என்கிற புதிய செல்போன் அமைப்பை சீனா அரசின் ஒப்புதலுடன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தினால், இந்த மைனர் மோட் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது மூன்று வயது, மூன்று முதல் எட்டு வயது, எட்டு முதல் பன்னிரெண்டு வயது, பன்னிரெண்டு முதல் பதினாறு வயது, பதினாறு முதல் பதினெட்டு வயது என்று குழந்தைகளின் வயது வரம்பினை பிரித்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் நேரத்தை அளவிடுகிறார்கள். இதில் எட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒரு நாளில் 40 நிமிடங்கள் மட்டும் தான் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி. அதேபோல, எட்டு வயது முதல் பதினாறு வயது முதல் உள்ள குழந்தைகள் ஒரு மணி நேரம் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி. அதிலும் குறிப்பாக மூன்றுவயது மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு, இணையத்தில் குழந்தைப் பாட்டுகள், கல்வி, பெற்றோர்-குழந்தை உறவுநிலை குறித்த நிகழ்ச்சிகள் ஆகியவை பார்க்க மட்டுமே அனுமதி. முன்னர் சொன்னதுபோலவே, 16-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்கள் மட்டுமே ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த அனுமதி. அதிலும் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை அவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.
ஏன் இந்த முடிவு?
ஏன் சீனா இந்த முடிவை தீடிரென்று எடுத்துள்ளது என்றால், ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையாக இந்தத் தலைமுறை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் தூக்கமின்மை, கல்வியில் கவனமின்மை போன்ற குளறுபடிகள் குழந்தைகளுக்கு பாலிய வயதிலேயே அதிகம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றினை கலையும் பொருட்டு இந்நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. இணையத்தில் விளையாடக் கூடிய விளையாட்டிற்கும் இனி புதிய சட்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடு ஆன்லைன் கேம் விளையாடும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக ஆன்லைன் கேம் விளையாடும் குழந்தைகள் தங்களின் சொந்த ஐ.டி பெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன பெற்றோர்களே, இந்த முறை மட்டும் இந்தியாவில் கொண்டுவரப்பட்டால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்.