ஜப்பானை சீண்டும் வகையில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதிகளுக்கு, சீன அரசு இதுவரை 67 கப்பல்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீனா மீது ஜப்பான் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்திய எல்லையில் உள்ள பகுதிகளுக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா தற்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக, பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சீனா பகைத்து கொண்டுள்ளது. தைவான் என்ற முழு நாடே தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதுதான் என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுடன் அதிருப்தி, ஆஸ்திரேலியாவுடன் வர்த்தகப் போர் மற்றும் சைபர் தாக்குதல் என பல நாடுகளுடன் சீனா பகைமை பாராட்டி வருகிறது.
இந்நிலையில், கிழக்கு சீனக்கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக, சீனாவுக்கும், ஜப்பானுக்கும் தற்போது மோதல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. அந்த கடற்பகுதியில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே Diaoyus, Senkakus என்ற தீவுகள் உள்ளன. இந்த தீவுப்பகுதிகளை 1972ஆம் ஆண்டு முதலே ஜப்பான் அரசுதான் நிர்வகித்து வருகிறது. ஆனால், சீன அரசு அந்த தீவு கூட்டங்களுக்கு பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன், அந்த தீவுப்பகுதியில் தனது விமானங்களை பறக்க விடுவது, ரோந்து கப்பல்களை அனுப்புவது போன்ற நடவடிக்கையிலும் சீன அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால், டோக்கியோவில் இருந்து 1,200 மைல்கள் சுற்றளவில் உள்ள கிழக்கு சீன கடலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அத்துடன், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 67 சீன கப்பல்கள் நுழைந்துள்ளதாக, ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வாரம் கூட, Senakaku தீவுப்பகுதியில் சீன கப்பல் நுழைந்ததாக, ஜப்பான் நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதனை காரணமாகக் கொண்டு, சீனாவுக்கு ஜப்பான் அரசு பதிலடி கொடுத்தால், மிகப்பெரிய மோதல் வெடிக்கும் என கூறப்படுகிறது. ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றின்படி, ஜப்பான் மீதோ, ஜப்பானின் பிராந்தியங்கள் மீதோ பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், ஜப்பானுக்கு அமெரிக்கா உதவி செய்யும். எனவே, சீனாவுக்கும், ஜப்பானுக்கும் மோதல் ஏற்படும் பட்சத்தில், ஜப்பானுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தனது நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளது. Diaoyu தீவும், அதனுடன் இணைந்த பகுதிகளும் தங்களுக்குத்தான் சொந்தம் எனவும், அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடவும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, இந்த தீவு விவகாரத்தைக்கொண்டு, ஜப்பானின் பழமைவாதிகள் இருநாட்டின் உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, குளோபல் டைம்ஸ் என்ற சீனப் பத்திரிகையும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் Yoshihide Suga, வரலாற்று ரீதியாகவும், சர்வதேச சட்டங்களின்படியும் Senkaku தீவுகள் தங்களுக்குதான் சொந்தம் என்றும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவிற்கு உறுதியாகவும், அதேநேரத்தில் அமைதியாகவும் தாங்கள் பதிலளிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளிடையேயான இந்த கருத்து மோதலால், கிழக்கு சீனக்கடலில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Discussion about this post