கொரோனாவிலிருந்து குண்மடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் பழனிசாமி, கடிதம் வாயிலாக பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளார். அந்தக் கடிதத்தில், பழந்தமிழ் குடியானது வறட்சி, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட அனைத்து இயற்கை பேரிடர்களையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.சீனாவில் கொரோனா பரவல் குறித்து தகவலறிந்த உடன், ஜனவரி மாதம் முதலே நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதையும், துரிதமாக பல்முனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
விலகி இருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்ற தனது கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மற்றும் மருத்துவத்துறையின் கூட்டு முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவிலேயே மிகக் குறைவான கொரோனா இறப்பு விகிதம் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இக்கட்டான சூழலிலும் விவசாயப் பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் அனுமதி அளித்ததன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தடுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.நோய் தொற்றை பேரிடராக அறிவித்து 4 ஆயிரத்து 333 கோடியே 23 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ததை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன்மூலம் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சுமார் 379 கோடி ரூபாய் நன்கொடை வரப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை நன்கொடையாக வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.கொரோனா சிகிச்சைப் பணிகளுக்காக 530 மருத்துவர்கள், 2 ஆயிரத்து 323 செவிலியர்கள், 1,500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 292 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.14 நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் என 35 லட்சத்து 65 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதையும் கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார்.கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் மற்றும் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதற்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்கியதையும் முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
தினமும் சுமார் 8 லட்சம் பேருக்கு இலவச உணவு, 33 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் என தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.சிறு, குறு நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், தமிழகத்தை உற்பத்தி மையமாக்க சிறப்பு முதலீட்டு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும்.தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post