ஏழைத்தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

60 லட்சம் ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். வரும் 28-ம் தேதிக்குள் அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் 2 ஆயிரம் ரூபாய் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Exit mobile version