தமிழகத்தின் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பெற்றுக்கொண்டார். அதன்படி, 2023-ம் ஆண்டிற்குள் சூரியசக்தி மூலம், 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரிய எரிசக்தியை உற்பத்தி செய்யும் மின்நுகர்வோருக்கு, 2 ஆண்டுகளுக்கு வரி சலுகை அளிக்கப்படும் எனவும், சூரிய சக்தி கோரி விண்ணப்பித்தால் 3 வாரங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில் சூரிய சக்தி குறித்து விளக்கப்பட உள்ளதாகவும், வரும் நாட்களில் புதிய மின் இணைப்புகளுக்கு இரட்டை வழி மீட்டர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு நிகரற்ற வசதியும், சூரிய மின் திட்டங்கள் சார்ந்த வேலை வாய்ப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சூரிய எரிசக்தி உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.