சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

73-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட்டு வரும் 73-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அப்போது, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், வேலூரை 3 ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்தும் என்றும் உறுதி அளித்தார். இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இந்தி பேசாத மாநில மக்களிடம் இந்தியை திணிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வுதியம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 15000 ரூபாயில் இருந்து 16000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாகவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடு செழிக்க தண்ணீர் அவசியம் என்பதால் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version