சுயமரியாதை மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. டெல்லி ஆந்திர பவனில் நடைபெற்று வரும் இந்த 12 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். இதற்கென ஆந்திராவில் இருந்து 2 ரயில்களில் டெல்லிக்கு போராட்டக்காரர்களை சந்திரபாபு நாயுடு அழைத்து சென்றுள்ளார். இந்தப் போராட்டத்திற்காக கோடிக்கணக்கான பணம் ஆந்திர பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்த போராட்டத்திற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், அதை எப்படி பெறுவது என தங்களுக்கு தெரியும் என்று கூறினார். ஆந்திர மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட இந்த பிரச்சனையில், தங்களது சுயமரியாதை மீது தாக்குதல் நடத்த மத்திய அரசு நினைத்தால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.