பேச்சுவார்த்தை நடத்த வரும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு கொடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவதாகக்கோரி, 5வது நாளாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவளார்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தை நடத்த வரும்படி, மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். சட்டத்தில் தனக்குள்ள அதிகாரத்துக்குள் மட்டுமே தான் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கிரண்பேடி கூறினார்.
கிரண்பேடியின் சவாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் சவாலை ஏற்று 39 மக்கள் நலத்திட்டகள் நிறுத்தம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நேருக்கு, நேர் விவாதிக்க தயார் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை கூறினார்.
Discussion about this post