சென்னையில், 43வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் 750க்கும் மேற்பட்ட அரங்குகளில் கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம், கல்வி என பல்வேறு தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் புத்தகக் காட்சியின் சிறப்பு அம்சமாக கீழடி- ஈரடி கண்காட்சியும் இடம்பெற்றது. புத்தகக் கண்காட்சியானது வேலை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. கண்காட்சியை காண மாணவர்கள் அல்லாத நபர்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தொடக்க விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சரோஜா, பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புத்தகம் வாசிக்கும் திறன் மூலம் தனிநபர் மட்டும் அல்லாது நாட்டின் சிந்தனை திறன் உயரும் என தெரிவித்தார். மேலும், மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அடுத்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பாக, 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.