புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 14 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 40 பேர் வீர மரணமடைந்தனர். இதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரனும், தூத்துக்குடியின் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் உடல், அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசின் பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, தேர்தல் விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டபின், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு, முன்னரே அறிவித்த தலா 14 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், தமிழக டிஜிபி டிகே.ராஜேந்திரன் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.