சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
சேலம் மாநகருக்குள் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மத்திய பேருந்து நிலையம், சேலம் நகருக்கு மத்தியில் அமைந்துள்ளதால், பிற மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகருக்குள் செல்ல வேண்டி உள்ளதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இதனால், அந்த பகுதியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2016ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த பாலத்தின் திருத்திய மதிப்பீடு 441 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு பாலம் என்ற பெருமை கொண்ட இதன் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த பாலத்தை இன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
Discussion about this post