நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், மரவள்ளி பயிர் பாதுகாப்புக்காக, 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் எக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாண்டில், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளியில், புதிய இன மாவுப்பூச்சியின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாவுப்பூச்சியின் தாக்குதலை கணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கும், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மரவள்ளி பயிர் பாதுகாப்புக்காக, எக்டேருக்கு ஆயிரத்து 750 ரூபாய் வீதம், 3 ஆயிரத்து 112 எக்டேரில் பயிர்பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதற்காக, 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post