தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 10 மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அதன் படி 2020 ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும், தமிழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை, பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து வழங்க வேண்டும், நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். மேலும், கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 3,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI-யின் மூலம், 1,000 கோடி ரூபாயை வழங்கி உதவ வேண்டும் எனவும், பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post