மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெறும் கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டாவது நாளில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் வெள்ளிக்கிழமை எண்ணப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறும் ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்க, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வேறொரு நாளில் அவருடன் வேலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுடன், பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, தொழில் துறை, வேளாண்மை, கால்நடைத் துறை, உணவுத் துறை, வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர், பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version