மக்களவை தேர்தலையொட்டி நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும்வகையில் தேர்தல் பறக்கும்படையினர் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பண நடமாட்டத்தை கண்காணித்து சில இடங்களில் வருமான வரித்துறை சோதனையும் அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தும் நோக்கில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியானது.
இதை கண்டித்து, விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விஜயவாடாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அவர் தனது தர்ணாவை துவக்கினார். வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறையினர் எதிர்காலத்தில் விலைகொடுக்க வேண்டிவரும் என்று அவர் தெரிவித்தார்.