ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2007ஆம் ஆண்டு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றதில் உள்ள விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பெருந்தொகையை லஞ்சமாகப் பெற்றதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் ஆகஸ்டு 21ஆம் தேதி டெல்லியில் சிதம்பரத்தைக் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. வழக்கு விசாரணைக்காகச் சிதம்பரத்தை சிபிஐ இருமுறை காவலில் எடுத்து விசாரித்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை எனவும், அவரைத் திகார் சிறைக்கு அனுப்பும்படியும் சிபிஐ கேட்டுக் கொண்டது. சிபிஐயின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துச் சிதம்பரத்தின் தாக்கல் செய்த மனுவை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும், இது ஒரு தவறான எடுத்துக்காட்டு ஆகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.