செஸ் விளையாட்டில் எத்தனையோ சாதனைகளை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்களை இவ்வுலகம் பார்த்திருக்கிறது. ஆனால், இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா தனது அசாத்தியமான துல்லிய நகர்வுகளால் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செஸ் விளையாட்டில் பிரம்மாண்டத்தை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்தும் 18 வயது நிரம்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தலைநகர் சென்னையில் 2005ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே செஸ் என்றால் கொள்ளை பிரியம் இவருக்கு.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கிய செஸ் போட்டியின் செல்லப்பிள்ளை பிரக்ஞானந்தா, 2013ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார்.
2016ஆம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். 2018ஆம் ஆண்டு ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று அல்டிமேட் சாதனையை படைத்தார்.
ஆன்லைனில் கடந்த ஆண்டு நடந்த AIR THINKS RAPID CHESS போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான கார்சலனுடன் மோதி 8வது சுற்றில் வெற்றி பெற்றார்.
அதற்கு பிறகு தற்போது அஜர்பைஜானில் நடந்து வரும் 10-வது உலக செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றனர். ((முதல் 2 சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், இன்று டை பிரேக்கர் முறை தொடங்கப்படவுள்ளது)) சாம்பியன் பட்டத்தை வெல்பவருக்கு 91 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு 66 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இதில் யார் வெற்றி பெற போகிறார் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தை முத்தமிட்டது போல், செஸ் விளையாட்டின் செல்லப்பிள்ளையான பிரக்ஞானந்தாவும் இந்த போட்டியில் வெற்றியை முத்தமிட வேண்டுமென்பதும் பலரின் ஆசையாக உள்ளது.