உலக அளவில் மிகப்பெரிய தகவல் தரவு மையமாக சென்னை மாறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மிகப்பெரிய தரவு மையமாக உருவாகி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொழில் பூங்கா மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலங்கள் கிடைப்பது ஆகியவை சாதகமான அம்சமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழகத்தை இணைக்கும் வகையில், கடலுக்கடியில் பதிக்கப்பட்ட கேபிள்கள் மற்றும் மின் மிகை மாநிலமாகத் தமிகம் திகழ்வதால், மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையை அதிக நிறுவனங்கள் தேர்வு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, 6 நிறுவனங்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை செய்துள்ளதாகவும், மேலும் பல நிறுவனங்கள் வர உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், சென்னையில் தரவு மையங்கள் அமைப்பதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும், உலக அளவில் மிகப்பெரிய தகவல் தரவு மையமாக சென்னை மாறும் என்றும், அதற்கான கொள்கைகளை தமிழக அரசு வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.