சந்திரயான்-2 விண்கலத்தை வாழ்த்தி பாடல் வெளியிட்ட சென்னை மாணவர்கள்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கும் சந்திரயான்-2 விண்கலத்திற்கு வாழ்த்து தெரிவித்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எத்தனையோ வல்லரசு நாடுகள் நிலவை ஆராய்ந்திருந்தாலும், 2008-ல் இந்தியாவால் ஏவப்பட்ட சந்திராயன்-1 தான், முதன் முதலில் நிலவில் தண்ணீருக்கான மூலக்கூறுகள் இருப்பதை உலகிற்கு சொன்னது. இரண்டாவது முறையும் வரலாறு படைக்கப்போகும் சந்திரயான்-2ன் வெற்றி இந்திய மாணவர்களின் கவனத்தை விண்வெளி ஆய்வின் பக்கம் திருப்பும் என்பதில் ஐயமில்லை.

தற்போது சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் இஸ்ரோவின் வெற்றி குறித்தும் சந்திரயான்-2 படைக்க இருக்கும் சாதனை குறித்தும் ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. ‘புது புது புது கனவுகள் இனி பூக்கும் காலமே, பூமியும் வானமும் கைகள் கோர்க்கும் நேரமே என தொடங்கும் இப்பாடல் சந்திரயான்-2 புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நிலவை ஓடி வரச்சொன்ன காலம் போனதே, நிலவில் கால் பதிக்கும் நேரம் வந்ததே’ என்னும் வரி விண்வெளி துறையில் நம் நாட்டின் வளர்ச்சியை உணர்த்துகிறது. உட்ரா..உட்ரா..ராக்கெட் உட்ரா எட்டு திசைகளும் நம் புகழ் வெல்ல. நேற்று நிலவை ரசித்து வாழ்ந்தோம், நாளை நிலவில் வசிக்க செல்வோம் என இப்பாடல் முடிவடைகிறது. மேலும் இன்று விண்ணில் பாயவிருக்கும் சந்திராயன்-2 வின் சாதனையை காண மாணவர்களே மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று ஸ்பேஸ் கிட்ஸ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பேஸ் கிட் அமைப்பை சேர்ந்த சிறுவர்கள் தான் உலகின் சிறிய செயற்கைக்கோளை நாசாவின் மூலம் விண்ணில் செலுத்தியவர்கள் என்று குறிப்பிடத்தக்கது.

Exit mobile version